Home விளையாட்டு ஒருநாள் தொடரில் மே.இ.தீவுகளுக்கு அவுஸ்திரேலியா பதிலடி

ஒருநாள் தொடரில் மே.இ.தீவுகளுக்கு அவுஸ்திரேலியா பதிலடி

51
0

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அலெக்ஸ் கேரி தலைமையிலான அவுஸ்திரேலியா மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் கிரன் பொல்லார்ட் தலைமையிலான மே.இ.தீவுகளுடன் பலப்பரீட்சை நடத்தி வந்தது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டி-20 தொடரை மே.இ.தீவுகள் 4:1 என்ற கணக்கில் கைப்பறியிருந்தது.

அதன் பின்னர் ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய 133 ஓட்டங்களினாலும், இரண்டாவது போட்டியில் மே.இ.தீவுகள் 4 விக்கெட்டுகளினாலும் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் மூன்றாவது தொடரின் இறுதியுமான ஒருநாள் ஆட்டம் பார்படோஸில் திங்கட்கிழமை இரு அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மே.இ.தீவுகள், அவுஸ்திரேலிய அணியினரின் பந்து வீச்சுகளில் திக்குமுக்காடி 45.1 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கிய எவின் லூயிஸ் மாத்திரம் அதிகபடியாக 55 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டாக் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், ஆஷ்டன் அகர் மற்றும் அடம் ஷாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் டர்னர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

153 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 30.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியை பதிவுசெய்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கியமொய்சஸ் ஹென்ரிக்ஸ் (1) மற்றும் ஜோஷ் பிலிப் (10) ஆகியோர் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய அலெக்ஸ் கேரி 35 ஓட்டங்களுடனும், மிட்செல் மார்ஷ் 29 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இறுதியாக 5 ஆவது விக்கெட்டுக்காக மெத்தேயு வேட் – ஆஷ்டன் அகர் ஜோடி சேர்ந்தாட அவுஸ்திரேலிய அணி இலகுவாக வெற்றியை பதிவுசெய்தது.

மெத்தேயு வேட் 51 ஓட்டங்களுடனும், ஆஷ்டன் அகர் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயனாக ஆஷ்டன் அகரும், தொடரின் ஆட்டநாயனாக மிட்செல் ஸ்டாக்கும் தெரிவானார்கள். 

மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 63 சராசரியுடன் ஸ்டார்க் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அவுஸ்திரேலியவின் 2-1 என்ற தொடர் வெற்றி, 2023 ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக்கில் 60 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு கொண்டு சென்றது. அதேநேரம் மே.இ.தீவுகள் 40 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here