Home உள்நாட்டு இந்தியாவை விட மோசமான நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் – வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்

இந்தியாவை விட மோசமான நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் – வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்

84
0

இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையானது, ஒரு மில்லியன் சனத்தொகைக்கு 1.91 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் ஒரு மில்லியன் சனத்தொகையில் ஏற்படும் மரணங்களின் வீதம் 2.11 ஆக இருக்கின்றது. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை இந்தியாவைவிடக் குறைவாக இருந்தாலும், சனத்தொகையின் அடிப்படையில் நோக்குகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் இந்தியாவை விடவும் மோசமான நிலையில் உள்ளன என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவருவதாக நாம் தொடர்ச்சியாகக்கூறி வருகின்றோம். தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மரணங்களுக்கான காரணம் மற்றும் நோயின் பரவல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யவேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். 

அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமான நாளிலிருந்து இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் ஆராய்கையில், தொற்றின் காரணமாக முதல் 500 மரணங்கள் பதிவாவதற்கு 343 நாட்கள் தேவைப்பட்டன.

அதன் பின்னர் 72 நாட்களுக்குள் அடுத்த 500 மரணங்கள் பதிவாகின. எனினும் வெறுமனே 13 நாட்களில் மூன்றாவது கட்டமாக 500 மரணங்கள் இடம்பெற்றன. 

ஆகவே தொற்றுப்பரவல் ஆரம்பமான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தொற்று ஏற்பட்ட ஒருவர் மரணிக்கக்கூடிய கால அவகாசம் குறைந்துகொண்டே செல்கின்றது. 

2020 மார்ச் மாதத்திலிருந்து 2021 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் வீதம் 46.6 சதவீதமாகும்.

ஆனால் மே மாதத்தில் மாத்திரம் 53.4 சதவீதமான மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த ஒரு வருட காலத்தில் பதிவான மரணங்களை விடவும் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் பதிவான மரணங்களின் எண்ணிக்கை உயர்வடைந்திருப்பதன் மூலம் நோய்த்தொற்றின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

அதேவேளை மேமாதத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வாரங்களின் அடிப்படையில் நோக்குகையில், முதல் வாரத்தில் 86 பேர், இரண்டாவது வாரத்தில் 157 பேர், மூன்றாவது வாரத்தில் 212 பேர், நான்காவது வாரத்தில் 234 பேர், ஐந்தாவது வாரத்தில் 293 பேர் என்றவாறு மரணங்கள் பதிவாகியுள்ளன.

எனவே அண்மைக்காலத்தில் வாராந்தம் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் மரணங்களைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதற்குப் பொதுமக்கள் முன்வரவேண்டும்.

அடுத்ததாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவினால் நாளாந்தம் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன் தரவுகளின்படி இம்மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 36,333 ஆக இருக்கின்றது. 

ஆனால் இம்மாதம் 7 ஆம் திகதியாகும் போது அந்த எண்ணிக்கை 30,145 ஆகக் குறைவடைந்திருக்கிறது. அதேவேளை வைத்தியசாலைகளிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியவர்களின் எண்ணிக்கை 1,172 ஆக உள்ளது. அவ்வாறெனில் எஞ்சிய 1,016 பேரும் எங்கு சென்றார்கள்? அவர்களுடைய நிலையென்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. 

தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவின் தரவுகளைத் தொடர்ச்சியாகப் பகுப்பாய்வுசெய்து நோக்குகையில், வாரந்தம் சிகிச்சைபெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு பெருமளவிற்குக் குறைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. 

ஆகவே தொற்றுநோய்ப்பிரிவு சரியான தரவுகளை வெளியிடுவதுடன், தற்போதைய தொற்றுப்பரவல் மற்றும் மரணங்கள் தொடர்பில் உரியவாறு பகுப்பாய்வு செய்யவேண்டும். அதனூடாக மாத்திரமே தொற்றுநோய் நிலைமை முகாமை குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

மேலும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சுகாதார அமைச்சும் அன்றாடம் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றது. அதன்படி இலங்கையில் மரணங்கள் ஏற்படும் வீதமானது ஒரு மில்லியன் சனத்தொகைக்கு 1.91 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஒரு மில்லியன் சனத்தொகையில் ஏற்படும் மரணங்களின் வீதம் 2.11 ஆக இருக்கின்றது. 

எனவே இந்தியாவில் அதிகளவான மரணங்கள் இடம்பெற்றாலும்கூட, தற்போது இலங்கையும் இந்தியாவின் நிலையை அண்மித்து வருகின்றது. சனத்தொகை அடிப்படையில் நோக்குகையில், இலங்கை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றது.

அதுமாத்திரமன்றி எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை இந்தியாவைவிடக் குறைவாக இருந்தாலும், சனத்தொகையின் அடிப்படையில் பார்க்கும்போது குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் இந்தியாவை விடவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன.  இவையனைத்தையும் கருத்திற்கொண்டு மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here