Home உள்நாட்டு பேர்ள் கப்பல் தோற்றுவித்த அச்சத்தால் பெரும் நெருக்கடிக்குள் மீனவ சமூகம்

பேர்ள் கப்பல் தோற்றுவித்த அச்சத்தால் பெரும் நெருக்கடிக்குள் மீனவ சமூகம்

116
0
Negombo, Sri Lanka - November 21, 2015: A Sri Lankan fisherman is repairing fishing net beside The Dutch Canal. The canal was at one time an important link in the transportation route which supplied the Dutch colonial administration. It runs for more than 60 miles, with part of the route running through Negombo. Now used by the local fisherman to get to the sea.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தோற்றுவித்துள்ள அச்சத்தினால்  நீர்கொழும்பு களப்பிற்குள் கப்பல்கள் நுழைவதும் பாணந்துறையில் இருந்து நீர்கொழும்பு வரையான கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மீன்பிடித்திணைக்களத்தினால் உடனடியாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ள மீனவ சமூகம் மீண்டும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது.

பேர்ள் கப்பல் கடலுக்குள் மூழ்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அதனை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த கப்பலின் தீ முழுமையாக அணைக்கப்பட்டு, அதனை ஆழ்கடலுக்குக் கொண்டு சென்றாலும் அதனாலேற்பட்ட பாதிப்புக்களிலிருந்து கடற்பிராந்தியம் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் 20 வருடங்கள் ஆகலாம் என்று  கடற்பிராந்தியப் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர எச்சரித்துள்ளார்

எனினும் சூழலியல் பாதிப்புக்கள் ஒருபுறமிருக்க இந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலும் அதனைத்தொடர்ந்து சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் பல்வேறு சமூகப்பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன.

குறிப்பாக கடலுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கக்கூடிய மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் பெரிதும் கேள்விக்குறியாகியுள்ளது. தீப்பரவல் ஏற்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தரித்து நிற்கும் பகுதியை அண்மித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மீனவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஏனைய கடற்பிராந்தியங்களில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெய் மற்றும் இரசாயனப்பொருட்களின் கசிவுகள் மீனின் உடலில் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக சந்தையில் மீனுக்கான கேள்வியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

‘கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை பேலியகொட மீன்சந்தையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீன்களைக் கொள்வனவு செய்வதை நாட்டுமக்கள் வெகுவாகக் குறைத்துக்கொண்டார்கள்.

அமைச்சர்கள் சிலர் வேகவைக்காத மீனை உண்டு காண்பித்து, அச்சப்படாமல் மீன் வாங்குங்கள் என்று மக்களிடம் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இவ்வாறு கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பாரிய வாழ்வாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த மீனவ சமூகம் தற்போது கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் மீண்டும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச்செயலாளர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட முடியாமல் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மீனவர்களுக்கு 5000 ரூபாவைப் பெற்றுக்கொடுப்பதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள விஜித ஹேரத், இக்காலப்பகுதியில் மேற்குக்கடலில் அதிகளவில் இறால்கள் உற்பத்தியாகும்.

அதனூடாக மீனவர்கள் அதிக வருமானத்தைப் பெறக்கூடிய வாய்ப்புக் காணப்பட்ட நிலையிலும், இந்தத் தீப்பரவல் காரணமாக அதனை இழக்கவேண்டியேற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மூழ்கும் நிலையிலுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால், நீர்கொழும்பு களப்பிற்குள் கப்பல்கள் நுழைவதும் பாணந்துறையிலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மீன்பிடித்திணைக்களத்தினால் உடனடியாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு அப்பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கப்பலிலுள்ள கொள்கலன்களிலிருந்து எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதனை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் ஆழ்கடலிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் ஏற்பட்ட சூழல்பாதிப்புக்களின் விளைவாக நேரடியாக ஏற்பட்ட சமூகப்பிரச்சினையாக மீனவ சமூகம் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார நெருக்கடியைக் குறிப்பிட முடியும்.

கப்பல் முழுமையாக ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லப்பட்டதன் பின்னரும் தற்போது ஏற்பட்ட மாசடைவிலிருந்து கடற்பிராந்தியம் முழுமையாக மீட்சியடையும் வரையில் அப்பகுதி மீனவர்கள் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here