Home உள்நாட்டு மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதிர்க்கட்சியினால் உயர் நீதிமன்றில் தாக்கல்

மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதிர்க்கட்சியினால் உயர் நீதிமன்றில் தாக்கல்

57
0

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று  வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர்நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைத் தடைசெய்வதற்கு முற்படுவதென்பது அடிப்படை உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்திருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மறு அறிவித்தல்வரை தடைசெய்யப்படுவதாக கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து  புதன்கிழமையிலிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுவோரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக நேற்று  வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தூக்கிச்சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நேற்று  வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டங்களை அடக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here