Home உள்நாட்டு நாட்டின் இலவச கல்வி கட்டமைப்பை சீர்குலைக்க இடமளியோம்: தேசிய மக்கள் சக்தி

நாட்டின் இலவச கல்வி கட்டமைப்பை சீர்குலைக்க இடமளியோம்: தேசிய மக்கள் சக்தி

65
0


கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்படுமானால், தற்போது எந்தவொரு வர்க்கபேதமுமின்றி அனைவருக்கும் கிடைக்கப்பெறக்கூடியதாகவுள்ள கல்வி மீண்டும் ஓர்’வரப்பிரசாதமாக’ மாற்றப்படுவதுடன் நாட்டின் ஒட்டுமொத்த கல்விக்கட்டமைப்பும் சீர்குலையும்.

 எனவே நாட்டின் கல்விக்கட்டமைப்பை சீர்குலைப்பதற்குப் பங்களிப்பு வழங்கியவர்கள் என்று வரலாற்றில் இடம்பிடிப்பதற்கு விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்தச் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தில் நாளையதினம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்படுவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படக்கூடும். இந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறையுடன் தொடர்புபட்ட விடயதானங்களில் பயிற்சியளித்தல் ஆகியவையே அதன் நோக்கங்களாகக் கூறப்பட்டன. எனவே இராணுவசேவையில் ஈடுபடுவதற்கு விரும்புவோர் தவிர்ந்த ஏனையோருக்கு இடமளிப்பதற்கும் ஏனைய பயிற்சிநெறிகளை வழங்குவதற்கும் ஜோன் கொத்தலாவல அவர்களும் விரும்பவில்லை. குறித்த பல்கலைக்கழகம் தொடர்பான யாப்பிலும் அவ்வாறு கூறப்படவில்லை. எனினும் கடந்த சில வருடங்களில் இக்கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதுடன் இராணுவத்துடன் தொடர்பற்றவர்களும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டார்கள். அதுமாத்திரமன்றி இராணுவசேவைக்கு எவ்வகையிலும் தொடர்பற்ற பாடவிதானங்களையும் இப்பல்கலைகழகத்தின் ஊடாகக் கற்பிப்பதற்கான சரத்துக்கள் புதிதாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 ஏற்கனவே நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு முரணாகவே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இயங்கிவருகின்றது. இராணுவப்பயிற்சி மற்றும் பாதுகாப்புத்துறையுடன் தொடர்புடைய பயிற்சிநெறிகளை வழங்கும் கட்டமைப்புக்களைப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்திற்குக் கீழ் கொண்டுவருவதில் எமக்கு எவ்வித அபிப்பிராயபேதங்களும் இல்லை. இவ்வாறான நடவடிக்கைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் நாளையதினம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் புதிய சட்டமூலமானது இராணுவப்பயிற்சி வழங்குவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதொரு சட்டமூலம் அல்ல. 

இராணுவத்தினர், அரச அதிகாரிகள் மற்றும் ஏனையோர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்துகொள்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் பல்கலைக்கழகத்தில் எந்தவொரு தரப்பினரும் தமது கல்வி நடவடிக்கைகளுக்காக இணைந்துகொள்ளமுடியும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குக் காணப்படும் அனைத்து அதிகாரங்களும் குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குப் பொறுப்பாகப் பாதுகாப்பு அமைச்சரினால் நியமிக்கப்படும் நிர்வாக சபைக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒன்பது பேரடங்கிய இந்த நிர்வாக சபையில் நான்குபேர் தவிர்ந்த ஏனைய அனைவரும் முப்படைகளைச் சேர்ந்தவர்களாவர். பொதுவாக உயர்கல்வி தொடர்பில் நன்கு தேர்ச்சிபெற்றவர்களே உயர்கல்விக் கட்டமைப்பை நிர்வகிப்பதற்கான பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள். அதனடிப்படையிலேயே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே பல்கலைக்கழகக் கட்டமைப்பு மற்றும் அதன் நிர்வாகம் ஆகிய விடயங்கள் தொடர்பில் பொதுவாகப் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு முரணான விடயங்களே இந்தப் புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் ஒரு எழுத்தைக்கூட மாற்றாமல் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளது. எனவே இவ்விரு அரசாங்கங்களுக்கும் இடையில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பில் மக்கள் நன்கு விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்றார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here