Home உள்நாட்டு இன்று பைஸர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமானது

இன்று பைஸர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமானது

75
0

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்களில் முதலாம்கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 55 – 69 வயதிற்குட்பட்டோருக்கு இரண்டாம்கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்கும் பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

மேற்படி வரையறைகளுக்கு அமைவாகத் தடுப்பூசி பெறுவதற்குத் தகுதிவாய்ந்த 25,000 பேரில் நேற்று  இரவு 08.00 மணி வரையில் சுமார் 5,000 பேருக்கு மாத்திரமே இரண்டாம்கட்டமாக பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு வருகைதரவேண்டிய இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட விபரங்கள் குறுஞ்செய்தியின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் எனவே இன்னமும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறாதவர்கள் பதற்றமடைந்து, தடுப்பூசி வழங்கல் நிலையங்களுக்கு வருகைதருவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கொழும்பு மாநகரத்திற்குப் பொறுப்பான பிராந்திய தொற்றுநோய்த்தடுப்பு வைத்தியநிபுணர் தினு குருகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இரண்டாம்கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் நேற்றைய தினம் வெள்ளவத்தை ரொக்ஸி கார்டன் சனசமூக நிலையம், மாளிகாவத்தை பி.டிசிறிசேன மைதானம் மற்றும் நாரஹென்பிட்டி இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டன.

அஸ்ட்ராசெனிகா முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 55 – 69 வயதிற்குட்பட்டோரில் இரண்டாம்கட்டத் தடுப்பூசியைப் பெறுவதற்கான அழைப்பை குறுஞ்செய்தி மூலம் பெற்றுக்கொண்டவர்கள் இன்று மேற்குறிப்பிட்ட இடங்களில் தமக்குரிய முழுமையான தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் தடுப்பூசியைப் பெற்றுகொள்வதற்கு குறுஞ்செய்தி மூலம் அழைப்பைப் பெற்றவர்கள் உரியநேரத்திற்கு வருகைதரவேண்டும் என்று வைத்தியநிபுணர் தினு குருகே வலியுறுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி குறுஞ்செய்தி கிடைக்கப்பெறாதவர்களை உடனழைத்துவருவதைத் தவிர்க்குமாறும் தேசிய அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டை ஆகியவற்றைக் கட்டாயமாக உடன் எடுத்துவரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தற்போது நாட்டை வந்தடைந்திருக்கும் 25,000 தடுப்பூசிகளையே முதற்கட்டமாகப் பகிர்ந்தளிக்க வேண்டியிருப்பதால், அதற்குத் தகுதிபெற்ற 25,000 பேரில் நேற்று இரவு 8 மணிவரையான காலப்பகுதியில் 5,000 பேருக்கு மாத்திரமே குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனவே குறுஞ்செய்தியைப் பெறாதவர்கள் அநாவசியமாகப் பதற்றமடைவதையும் அதுகுறித்து விசாரிப்பதற்காகத் தடுப்பூசி வழங்கல் நிலையங்களுக்கு வருகைதந்து நெரிசலை ஏற்படுத்துவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தினு குருகே அவரது டுவிட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை தடுப்பூசியைப் பெறுவதற்கு வருகை தரவேண்டிய இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட விபரங்களை அறிந்துகொள்வதற்காக தமக்கு மின்னஞ்சல்களை அனுப்பிவைக்க வேண்டாம் என்றும் இன்னும் 5 நாட்களுக்குள் முதற்கட்டமாகத் தகுதிபெற்ற ஏனைய 20,000 பேருக்கும் குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி அழைப்பின் ஊடாக உரிய விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், புற்றுநோய், சிறுநீரகநோய், பாரிசவாதம் ஆகிய நோய்களைக் கொண்டிருப்பவர்களும் சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டவர்களும் மாத்திரம் மின்னஞ்சல் ஊடாகத் தத்தமது நிலை தொடர்பில் அறிவிக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here