Home உள்நாட்டு சிறுபோகத்தில் 15 இலட்சம் மெட்ரிக் டொன் நெல் அறுவடை கிடைக்கும் – விவசாயத்துறை...

சிறுபோகத்தில் 15 இலட்சம் மெட்ரிக் டொன் நெல் அறுவடை கிடைக்கும் – விவசாயத்துறை அமைச்சர்

64
0

சிறுபோகச் செய்கை ஊடாக இம்முறை 15 இலட்சம்  மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறுவடையின் குறிப்பிடத்தக்களவு நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக  விவசாயத்துறை  அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திட்டத்திற்கு அமைய நாடு நெல் ஒரு கிலோ கிராம் 50 ரூபாவிற்கும்  சம்பா நெல் ஒரு கிலோ 52 ரூபாவிற்கும் , கீரி சம்பா நெல் ஒருகிலோ கிராம்  55 ரூபாவிற்கும் நிர்ணய விலையின் கீழ் விவசாயிகளிடம் கொள்வனவு செய்ய முடியும்.

நிர்ணய விலைக்கு மேலதிகமாக தரமான நெல்லை விவசாயிகளிடம் இருந்து  நேரடியாகக் கொள்வனவு செய்யும் போதும் போக்குவரத்திற்காகவும் ஒரு கிலோவுக்கு 1.50 ரூபாவை விவசாயிகளுக்கு செலுத்துதல் அவசியமாகும்.

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகளின் தரமான நெல்லை விவசாய  அமைப்புக்கள் மூலம் கொள்வனவு செய்யும் போது நிர்ணய விலைக்கு மேலதிகமாக பதனிடல் மற்றும் போக்குவரத்திற்காக ஒரு கிலோக்கு 1.50 ரூபாவை விவசாயிகளுக்கு செலுத்துதல் வேண்டும்.

ஈர நெல் உலர்த்தும் வசதிகளைக் கொண்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய அமைப்புக்கள் மூலம் நெல் கொள்வனவு செய்யும் போது ஈரப்பதன் 14 தொடக்கம் 22 வரை ஒரு கிலோ கிராமிற்கு  8 ரூபாவைக் கழித்து விவசாயிகளுக்கு செலுத்துவதற்கும்  அவ்வாறான நெற்தொகையை உலர்த்தி நியமமாகத் தயாரித்துக் கொள்வதற்காக ஒரு கிலோ கிராமிற்கு 4 ரூபாவும் , போக்குவரத்திற்காக 2  ரூபாவும் குறித்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விவசாய  அமைப்புக்கள் செலுத்த வேண்டும்.

2021 சிறுபோக நெல் கொள்வனவுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு திறைசேரியின் தலையீட்டில் நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் ,அரசாங்க அதிபர்களுக்கும் அதிகாரம் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here